குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகளை கொட்டி பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகளை கொட்டி பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 9:15 PM GMT)

குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகளை கொட்டி பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குளித்தலை,

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகேயுள்ள காலி இடத்தில் நகராட்சி மூலம் குப்பைகளை கொட்டி பிரிக்கும் பணிக்கான கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கு இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டால் சுகாதார சீர்கேடு உருவாகும் பொதுசுகாதாரம் பாதிக்கப்படும். எனவே, குப்பைகளை கொட்டி பிரிக்க வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் குளித்தலை உழவர் சந்தை பெண்கள் பொதுக்கழிப்பிட கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் அருகே நகராட்சி மூலம் தொட்டி அமைத்து அங்கு குப்பைகள் கொட்டி பிரிக்கும் பணி நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும், எனவே இங்கு இப்பணிகளை மேற்கொள்ளக்கூடாதென இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இரண்டு இடங்களிலும் குப்பைகளை கொட்டி பிரிக்க அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமாலி கூறுகையில், நம் குப்பை நம் பொறுப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மறு சுழற்சி செய்யப்படக்கூடிய பொருட்கள் மற்றும் மறுசுழற்சிக்கு உதவாத பொருட்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்படுகிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்று கிடைக்கும் தொகை குப்பைகளை பிரிக்கும் பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. மறு சுழற்சிக்கு உதவாத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக வழங்கப்படுகிறது.

மக்கும் குப்பைகளை உரமாக்க குளித்தலை பெரியார் நகர் உழவர் சந்தை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நுண் உரக் குடில் கட்டப்படவுள்ளது. இதில் பல தொட்டிகள் அமைக்கப்படவுள்ளது.

எந்திரம் மூலம் தூளாக்கப்பட்ட குப்பைகள் இந்த தொட்டிகளில் கொட்டப்பட்டு இவை மக்கச்செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படவுள்ளது. இந்த உரத்தை அனைத்து தரப்பு மக்களும் பெற்று பயனடையலாம். நுண் உரக் குடில் அமையவுள்ள பகுதியில் எந்தவிதமான சுகாதார சீர்கேடும் ஏற்படாது.

இந்தியா முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story