வெள்ளலூர் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
கோவை வெள்ளலூரில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடுகள் வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:–
கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். மீனவரான இவர் மீன் விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய நண்பர் ஜெயக்குமார், அவருடைய மனைவி சுகுணா ஆகியோர், மீனவர் சண்முகத்தை அணுகி, குடிசைமாற்று வாரியம் சார்பில் வெள்ளலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இலவச வீடு ஒதுக்கீடு பெற ரூ.30 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் வீடு பெற்று தருவதாகவும், தங்களுக்கு பல அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளதாகவும், கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் திருமலை என்ற அதிகாரி தங்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார்கள். இதற்காக தங்களுக்கு தெரிந்த குஞ்சுமோன் அவருடைய மனைவி காயத்திரி ஆகியோர் இடைத்தரகர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய சண்முகம், தனது பெயரிலும், தன்னுடைய மனைவி பார்வதி பெயரிலும் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குஞ்சுமோன் மற்றும் அவருடைய மனைவி காயத்திரியிடம் ரூ.73 ஆயிரம் செலுத்தினார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததால் பல முறை இதுகுறித்து சண்முகம் கேட்டார்.
இந்தநிலையில் வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு முடிவடைந்த நிலையில், தங்களுக்கு வீடு கிடைக்காததால் இதுகுறித்து சண்முகம் விசாரித்தபோது, ஜெயக்குமார், அவருடைய மனைவி சுகுணா, இடைத்தரகர் குஞ்சுமோன், அவருடைய மனைவி காயத்திரி, திருமலை ஆகியோர் ஏராளமானவர்களிடம் இதுபோன்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகம் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர் பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மோசடி கும்பலை சேர்ந்த பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த காயத்திரி (வயது 55), கோவை வின்சென்ட்ரோடு ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (48), அவருடைய மனைவி சுகுணா (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி கும்பல் வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக கூறி, 40–க்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.