குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகள்; தொழிலாளர்கள் பீதி


குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகள்; தொழிலாளர்கள் பீதி
x
தினத்தந்தி 15 Dec 2018 11:37 PM GMT (Updated: 15 Dec 2018 11:37 PM GMT)

குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, மான், சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியில் வறட்சி, தீவன பற்றாக்குறை, வழித்தட ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால், அங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதில் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சில நேரங்களில் மனித–வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சூர் அருகே உள்ள டெரேமியா, தூதூர்மட்டம், அனிமன், நாக்குநேரி ஆகிய பகுதிகளில் குட்டியுடன் 5 காட்டுயானைகள் முகாமிட்டன. அங்கு மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. இந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் குந்தா வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் கிரேக்மோர், கிளன்கர்னி, குறியமலை ஆகிய பகுதிகளுக்குள் புகுந்தன. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story