வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு


வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 5:09 AM IST (Updated: 16 Dec 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

கூடலூர்,

கேரள மாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா தலப்புழா அருகே 44–ம் நெம்பர் பகுதியில் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியர் அனில்குமார் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு குறித்து தலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வங்கி ஊழியர் சாவில் மர்மம் உள்ளதாகவும், ஆகவே அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு பெண் உள்பட 6 மாவோயிஸ்டுகள் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள், வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். பின்னர் அங்கிருந்து கண்டன ஊர்வலமாக கோ‌ஷமிட்டவாறு வனப்பகுதிக்குள் சென்று தலைமறைவாகினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தலப்புழா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கேரள தண்டர்போல்ட் போலீசாரும் விரைந்து வந்து வனத்துக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதேபோல் முக்கிய சாலைகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்கி ஊழியர் சாவு குறித்து மாவோயிஸ்டுகள் ஊர்வலமாக கோ‌ஷமிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story