வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் இயற்கை முறையில் விவசாயம் செய்ய அறிவுரை வழங்க வேண்டும் கலெக்டர் பேச்சு


வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் இயற்கை முறையில் விவசாயம் செய்ய அறிவுரை வழங்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2018 4:00 AM IST (Updated: 16 Dec 2018 9:12 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் பேசினார்.

வேலூர், 

பாரம்பரியமான இயற்கை வேளாண்மை முறையை கையாளுவது குறித்து மாநில அளவில் வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது விவசாயிகள் பாரம்பரிய முறையிலேயே விவசாயம் செய்து வந்தனர். அப்போது ஏற்பட்ட பஞ்சத்தால் உணவின் தேவையை சரிசெய்ய விவசாய நிலங்களில் ரசாயன உரங்களையும், மருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்தினர்.

மேலும் பல ஆண்டுகள் நாம் பயன்படுத்தி வந்த மருந்தின் காரணமாக மண்ணின் வளமும் குறைந்து காணப்படுகிறது. எனவே மண்ணின் தன்மையை பாதுகாத்திடவும் இயற்கை முறையில் விவசாயத்தை மேம்படுத்தவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.


விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் அளவிற்கு மண்ணின் தன்மையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக விவசாயிகளுக்கு அதிகாரிகள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். பாரம்பரிய வேளாண் முறையை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயன்படுத்தும் ரசாயன உரத்தின் அளவையும் குறைக்க முடியும். அடுத்தபடியாக மருத்துவ குணம் கொண்ட செடிகளை பயிரிட்டு அதன் மூலமும் மண்ணின் தன்மையை பாதுகாக்கலாம்.

இயற்கை முறையில் விளையக்கூடிய உணவு தானியங்கள் மற்றும் விலை பொருட்களை வாங்கும் அளவிற்கு பொதுமக்கள் உள்ளனர். இதன்மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு அவர்களின் வருமானமும் அதிகரிக்கும். நமது பாரம்பரிய இயற்கை முறையில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் இயற்கையான பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி பல இடங்களில் செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உதவி செய்தால் பாரம்பரிய விவசாயத்திற்கு சாத்தியமாகும். மேலும் வருங்காலங்களில் இயற்கை விவசாயம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சென்னை வேளாண் துணை இயக்குனர் அசோகன் (மானாவரி விவசாயத் திட்டம்), காசியாபாத் இளநிலை விஞ்ஞானி ஸ்ரீனிவாசமூர்த்தி, இளநிலை விஞ்ஞானி ஜெயந்திராமன் (பெங்களூரு), இணை இயக்குனர் சுப்புலட்சுமி (வேளாண்மை), சேலம் ஆத்தூர் வேளாண்மை அலுவலர் வேல்முருகன், வேளாண் துறை துணை இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story