வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.62 லட்சம் தங்கம் சிக்கியது வாலிபர் கைது


வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.62 லட்சம் தங்கம் சிக்கியது வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 5:06 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபரை கைது செய்தனர். மற்றொருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

கோவையில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உள்நாட்டு முனையங்களில் சுங்க இலாகா சோதனை கிடையாது என்பதால், பன்னாட்டு முனையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள், உள்நாட்டு முனையத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது கோவையில் இருந்து விமானத்தில் வந்த இலங்கையை சேர்ந்த முகமது ரேலி (வயது 35) என்பவரது உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் ஒரு பார்சல் இருந்தது. அதில் 14 தங்க கட்டிகள் இருந்தன.

இதுபற்றி முகமது ரேலியிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, விமானத்தில் உள்ள கழிவறையில் கிடந்த அந்த பார்சலை எடுத்து வந்ததாக கூறினார். அவரிடம் இருந்து ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் இருந்து சென்னை வந்த அந்த விமானம், அதிகாலையில் கொழும்பில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து, உள்நாட்டு விமானமாக கோவை சென்று உள்ளது. எனவே கொழும்பில் இருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்ம ஆசாமிகள், விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து உள்ளனர்.

சென்னை வந்த அந்த விமானம், உள்நாட்டு விமானமாக கோவை சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பி வந்தபோது அதில் பயணம் செய்த இலங்கை வாலிபர் முகமது ரேலி, கழிவறையில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தை எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து முகமது ரேலியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்?, யாருக்காக அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்தார்? என அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் குவைத்தில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவரிடம் இருந்த கைப்பையில் உள்ள வளையங்கள் (பக்கிள்) தங்கத்தால் ஆனது என்பது தெரிந்தது.

மேலும் அவரிடம் இருந்த ‘ஸ்டேபிளர்’ உள்ளேயும் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Next Story