சோழிங்கநல்லூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


சோழிங்கநல்லூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 16 Dec 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ஜவஹர் நகர், எழில்முகநகர், தாழம்பூர் காந்திநகர் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து செல்லும் முக்கியசாலை குண்டும் குழியுமாக உள்ளது.

இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரியும், 5 குடியிருப்பு பொதுநல சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, “குண்டும், குழியுமாக இச்சாலை உள்ளதால் அவசரமாக மருத்துவமனைக்கு செல்லக்கூட இப்பகுதிக்கு வாகனங்களை ஓட்டிவர டிரைவர்கள் தயங்குகின்றனர். இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபட்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் இங்குள்ள தனியார் ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இச்சாலையில் தேங்கி நிற்கிறது. அந்தநீர் அங்குள்ள தாங்கல் ஏரியில் கலந்து தொற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு மற்றும் அவசரத்தேவைகளுக்கு ஓ.எம்.ஆர். சாலைக்கு வர அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், காந்திநகர் பகுதியிலிருந்து தெருவிளக்குகள் ஏதும் இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்லமுடியாத நிலையும் உள்ளது” என்றும் தெரிவித்தனர்.

Next Story