மேட்டூர் அணை நீர்மட்டம் 99.20 அடியாக குறைந்தது கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 99.20 அடியாக குறைந்தது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இதேபோல் கால்வாய் நீர் திறப்பு மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயனடைகின்றன. இதன் மூலம் 3 மாவட்டங்களிலும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கால்வாய் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் தொடர்ந்து 135 நாட்களுக்கு விடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் கால்வாய் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கிடையே கால்வாய் பாசன விவசாயிகள் தண்ணீர் திறப்பை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வருகிற 31-ந்தேதி வரை தண்ணீர் திறப்பை நீடித்து உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது.
கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த மழைஅளவு தற்போது குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி அணை நீர்மட்டம் 100 அடிக்கும் கீழ் இருந்தது. அதன்பின்னர் கஜா புயல் மற்றும் டெல்டா பாசன பகுதியில் பெய்த மழை காரணமாக, திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத்தொடங்கியது. கடந்த 3-ந்தேதி நீர்மட்டம் 103.80 அடியாக உயர்ந்தது.
இதன்பின்னர் காவிரி டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,513 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம் 99.20 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1,324 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீருமாக மொத்தம் 13 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story