தஞ்சையில் போலி மது தயாரித்த 2 பேர் கைது 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்


தஞ்சையில் போலி மது தயாரித்த 2 பேர் கைது 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Dec 2018 11:15 PM GMT (Updated: 16 Dec 2018 6:47 PM GMT)

தஞ்சையில் தொடர் தேடுதல் வேட்டையாக நேற்று போலி மது தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் போலி மதுபானம் தயாரிப்பதாக வந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சிவபாதசேகர், மார்ட்டின், மோகன்தாஸ், ராஜேஷ்கண்ணா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கடந்த 12-ந் தேதி தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள சோழன் நகரில் ஒரு வீட்டில் போலி மது தயாரித்த 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தஞ்சையில் மேலும் சில இடங்களில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் போலி மதுபானம் தயாரிப்பவர்களை கைது செய்ய தொடர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆசிரியர் காலனிக்கு உட்பட்ட ரியாஸ்நகரில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்துசென்றனர்.

பின்னர் போலி மது தயாரிக்கப்படுவதாக கூறப்பட்ட வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அங்கு மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. காலி பாட்டில்கள், மூடிகள், பல்வேறு மதுபான நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள், மது தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், எந்திரங்கள் மற்றும் கேன்களில் சாராயம் ஆகியவை வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 38), தினேஷ் (27) ஆகியோர் என்பதும், இவர்கள் ஏற்கனவே பிடிபட்டவர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, புதுச்சேரியில் இருந்து மது தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து போலி மது தயாரித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 4 ஆயிரம் மதுபாட்டில்கள், மது தயாரிக்க பயன்படுத்தப்பட்ட காலி பாட்டில்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் 11 கேன்களில் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், மது தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் சாராயம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story