திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்


திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:30 PM GMT (Updated: 16 Dec 2018 6:54 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிக்காக திருவண்ணாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம், பண்ருட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்வாரிய ஊழியர்கள மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமூடி தாலுகா கொத்தம் பாளையத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முத் துக்குமார்(வயது21). இவர் மின்வாரிய ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் பிள்ளையார்கோவில் தெருவில் நேற்று மாலை முத்துக்குமார் மற்றும் பலர் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதில் மின்கம்பத்தின் மீது முத்துக்குமார் ஏறி நின்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மின் இணைப்பு கொடுக்கப்பட்டதால் முத்துக்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததால் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முத்துக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story