கொரடாச்சேரி பகுதியில் தரமற்ற விதையால் நெல் சாகுபடி பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


கொரடாச்சேரி பகுதியில் தரமற்ற விதையால் நெல் சாகுபடி பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:15 AM IST (Updated: 17 Dec 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி பகுதியில் தரமற்ற விதையால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொரடாச்சேரி,

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான நெல் விதைகள் அரசு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு விற்பனை நிலையங்களில் சாகுபடி பரப்புக்கு தேவையான அளவு நெல் விதைகள் கிடைப்பதில்லை என விவசாயிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார்கள்.

பெரும்பாலான விவசாயிகள் நெல் விதைகளை தனியார் விற்பனை நிலையங்களில் வாங்கி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தனியார் விற்பனை நிலையங்களில் தரமற்ற நெல் விதைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, அரசால் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசின் சான்று பெற்ற விதைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை வேளாண்மை துறை அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்து, ஆய்வு நடத்த வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது. இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும் தனியார் விற்பனை நிலையங்களில் இருந்து தரமற்ற விதைகள் கிடைப்பதால் நெல் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தரமற்ற விதைகளால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள மேலதிருமதிகுன்னம் கிராமத்தில் நெல் சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

திருவாரூர் பகுதியில் உள்ள தனியார் விற்பனை நிலையத்தில் இருந்து கிடைத்த தரமற்ற கலப்பு விதைகளால் நெற்பயிரில் முழுமையான வளர்ச்சி இல்லை. சில பயிர்கள் மட்டுமே நெற்கதிர்களாக காட்சி அளிக்கின்றன. பல பயிர்கள் வெறும் நாற்றாகவே உள்ளன. ஒரே வயலில் இரு வித தன்மையுடன் பயிர்கள் காட்சி அளிப்பது வேதனையாக உள்ளது. மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தரமற்ற நெல் விதைகளை விற்ற தனியார் விற்பனை நிலையம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமற்ற நெல் விதைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

அரசின் மூலம் மட்டுமே நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story