புளியந்தோப்பு, ஓட்டேரியில் வழிப்பறி: அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் கைது


புளியந்தோப்பு, ஓட்டேரியில் வழிப்பறி: அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 11:15 PM GMT (Updated: 16 Dec 2018 7:23 PM GMT)

சென்னை புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர், புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது, 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4,500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் புளியந்தோப்பு ஆட்டுதொட்டி அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், கொருக்குபேட்டையை சேர்ந்த மாரி (31) மற்றும் அவருடைய தம்பி திருநா என்ற திருநாவுக்கரசு (23) என்பதும், கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததும் தெரிந்தது.

மேலும் இவர்கள், புளியந்தோப்பில் முத்து என்பவரை தாக்கிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது. மாரி மீது வடசென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 2 கொலை, 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அண்ணன்-தம்பி இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓட்டேரி ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் அருள்(48). இவர் ஆழ்வார்பேட்டையில் ஏ.சி. மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். அவர்களை விரட்டிச்சென்ற அருளை, தங்களிடம் இருந்த அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின்பேரில் மர்மநபர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை வைத்து அதே பகுதியை சேர்ந்த சலீம் (24), ஜாபர்செரீப் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு செல்போன், அரிவாள், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 2 பேரையும் சிறையிலும் அடைத்தனர்.

Next Story