பெரம்பலூரில் துணிகரம்: வீட்டில் நிறுத்தியிருந்த கார் திருட்டு 10 பவுன் நகைகளையும் மர்மநபர்கள் அள்ளி சென்றனர்


பெரம்பலூரில் துணிகரம்: வீட்டில் நிறுத்தியிருந்த கார் திருட்டு 10 பவுன் நகைகளையும் மர்மநபர்கள் அள்ளி சென்றனர்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் மற்றும் பீரோக்களை உடைத்து 10 பவுன் நகைகளையும் மர்மநபர்கள் அள்ளி சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டை சேர்ந்த துறைமங்கலம் நியூ காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மகேந்திரன் (வயது 34). இவர் துபாய் நாட்டில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். மகேந்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரை சேர்ந்த கார்த்திகா என்பவருடன் திருமணமானது. இதையடுத்து மகேந்திரன் நியூ காலனி தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டிய வீட்டில் மனைவி கார்த்திகாவுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்.

திருமணம் முடிந்து 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் துபாய்க்கு மகேந்திரன் வேலைக்கு சென்று விட்டார். தற்போது கர்ப்பமாக உள்ள கார்த்திகா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து கார்த்திகாவும் கடந்த 4 மாதங்களுக்கு முன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. வீட்டில் மகேந்திரனின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும், காலை நேரத்திலும், அவ்வப்போதும் அருகே வசிக்கும் மகேந்திரன் தாய் ராஜமாணிக்கம் வந்து அந்த வீட்டை திறந்து சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் சுத்தம் செய்ய வீட்டிற்கு வந்த ராஜமாணிக்கத்திற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கேட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் நிறுத்தியிருந்த புதிய காரையும் காணாததால் ராஜமாணிக்கம் திடுக்கிட் டார். மேலும் வீட்டின் நுழைவு வாயில் கதவும் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. பின்னர் ராஜமாணிக்கம் உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் உள்ளிட்டவை படுக்கை அறையில் சிதறி கிடந்தன. மேலும் பீரோக்களில் இருந்த மொத்தம் 10 பவுன் தங்க நகைகளையும் மர்மநபர்கள் அள்ளி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜமாணிக்கம் உடனடியாக தனது முதல் 2 மகன்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த தெருவில் உள்ள மற்ற வீடுகளின் வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டினுள் புகுந்து கார் மற்றும் நகைகளை திருடிய சம்பவம் பெரம்பலூர் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story