அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; ஒருவர் படுகாயம் மாடுகளை ஏற்றிவந்த சரக்கு வாகனங்கள் பறிமுதல்


அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; ஒருவர் படுகாயம் மாடுகளை ஏற்றிவந்த சரக்கு வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Dec 2018 4:30 AM IST (Updated: 17 Dec 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் படுகாயமடைந்தார். மாடுகளை ஏற்றிவந்த சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல்,

இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூரில் மார்கழி 1-ந்தேதியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திருநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனால் காலை முதலே ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டு திடலில் கூடினர். பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்த சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட மாடுகள் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு திடலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்து இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் ஆங்காங்கே ஓடி மறைந்து விட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாத்திராம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகளை ஏற்றிவந்த 15 சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அசோக்குமார் இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து வாகனங்களின் மாடுகளை ஏற்றி வந்த சமயபுரத்தை சேர்ந்த சேகர் (வயது 30), இனாம்குளத்தூரை சேர்ந்த பாண்டியன் (22), அரியலூரை சேர்ந்த மேகநாதன் (38), துறையூரை சேர்ந்த சிலம்பரசன் (27), திருச்சியை சேர்ந்த மரியசூசை (24), விராலிமலையை சேர்ந்த சுப்பிரமணியம் (29), கரூரை சேர்ந்த தண்டபாணி (33), மலைக்குடிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (32) உள்பட 15 பேர் மீது வழக்குபதிவு செய்து சரக்கு வாகனங்களை பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story