பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 51 பேருக்கு ஓய்வூதிய உதவித்தொகைக்கான ஆணை வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்


பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 51 பேருக்கு ஓய்வூதிய உதவித்தொகைக்கான ஆணை வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 4:04 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 51 பேருக்கு ஓய்வூதிய உதவித் தொகைக்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, கல்வி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை, இலவச தையல் எந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 293 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தொழிலாளர் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை ரூ.1,000 வீதம் 51 பயனாளிகளுக்கு ரூ.51 ஆயிரத்திற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பட்டு வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரிய திட்டத்தின் கீழ் அரசு வெண்பட்டு வித்தகத்தில் தினக்கூலி பணியாளர்களாக பணிபுரியும் மொத்தம் 18 தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன், கலால் உதவி ஆணையர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story