தொடர் போக்குவரத்து நெருக்கடி: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை பொருட்காட்சி திடலுக்கு மாற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டரிடம் மனு


தொடர் போக்குவரத்து நெருக்கடி: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை பொருட்காட்சி திடலுக்கு மாற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:45 PM GMT (Updated: 17 Dec 2018 6:59 PM GMT)

தொடர் போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை பொருட்காட்சி திடலுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷில்பாவிடம், மனு கொடுக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போல் வேடமணிந்து இருந்தனர். நடன கலைஞர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் ஆடல் பாடல் நடத்தி ‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் திரட்டினர். அவர்கள் அந்த நிதியை கலெக் டர் ஷில்பாவிடம் வழங்கினர். தொடர்ந்து மேடை நடன கலைஞர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், “எங்கள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பாரம்பரிய மிக்க ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பொதுவாக நிகழ்ச்சிகள் நடத்த இரவு 7 மணி முதல் 10 மணி வரை காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு மேல் தொடங்குகிறது. போதிய நேரம் கிடைப்பது இல்லை. எங்களுக்கு இரவு 8 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கண்மணிமாவீரன், மாரியப்பன், நாகராஜசோழன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர்.சிலையில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சங்கு ஊதி நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “குடும்பர், பண்ணாடி, காலடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான், பள்ளர் ஆகிய 7 பிரிவுகள் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமுகத்தின் உட்பிரிவுகளாகும். அந்த பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்ற செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல் -அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இனியும் காலம் தாழ்த்தாமல் எங்கள் கோரிக்கைகளை மத்திய -மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அசன்ஜாபர் அலி, துணை செயலாளர் எம்.சி. ராஜன் உள்ளிட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், “நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருவதால் பஸ்நிலையத்துக்கு வரும் பஸ்கள் வெளியே நிறுத்தப்படுகின்றன. பஸ்நிலையத்தை சுற்றியே 5 தற்காலிக பஸ்நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தொடர் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வரும் போது கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் சந்திப்பு பஸ்நிலையத்தை நெல்லை டவுன் பொருட்காட்சி திடலுக்கு மாற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அருகே நொச்சிகுளத்தை அடுத்த பற்குளத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பள்ளிக்கூடம் 1943-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் எங்கள் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். அந்த பள்ளிக்கூடத்தை தரம் உயர்த்த வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமையில் பாளையங்கோட்டையை அடுத்த பர்கிட்மாநகரத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், “எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சொந்த வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். அவர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு இந்து ஆட்டோ ஓட்டுனர்கள் முன்னணி சங்க மாநகர் மாவட்ட பொறுப்பாளர் இசக்கிமுத்து தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பாளையங்கோட்டையில் புதிதாக அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனை முன்பு புதிய ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை அடுத்த அரியகுளம், கீழநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊர் அருகே உள்ள கட்டுடையார்குளத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் வடகரை பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், கங்கைகொண்டான் சிற்றாறு பகுதியை ஆக்கிரமித்து தனியார் காற்றாலை மின்கம்பம் அமைக்கப்பட்டு வருகிறது. குடிநீர் இணைப்புகளின் மேல் இப்பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் குழாய்கள் உடைந்து விடுகின்றன. எனவே தனியார் காற்றாலைக்கு மின்கம்பம் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், “வள்ளியூர் பஸ்நிலையம் முன்பு ஒரு தலைக்காதலால் மெர்சி கொலை செய்யப்பட்டார். அவருக்கு தாய் இல்லை. தந்தை மற்றும் சகோதரர் பராமரிப்பில் மெர்சி வாழ்ந்து வந்தார். தற்போது அந்த குடும்பம் வறுமை நிலையில் உள்ளது. இதனால் மெர்சியின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story