உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: ஈரோட்டில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: ஈரோட்டில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:15 PM GMT (Updated: 17 Dec 2018 8:05 PM GMT)

உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

ஈரோடு,

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக இந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டங்கள் அமைக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது 21 திட்டங்களுக்கான பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. இதில் 11 திட்டப்பணிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த திட்டங்களால் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. நிலம் வழங்க விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் சாலையோரங்கள் வழியாக புதைவட கேபிள்களாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படாமல், மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்தது. எனவே இந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாவட்ட பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ராசிபாளையத்தில்(தாராபுரம்) இருந்து பாலவாடி(தர்மபுரி) மின்பாதையில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கப்படுவதால் ஈரோடு மாவட்டத்திலும் சென்னிமலை முதல் குருவரெட்டியூர் வரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே மின்கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று பல கட்ட போராட்டங்கள் நடந்தன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அருகே உள்ள முத்தாயிபாளையம் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களையும் பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஈரோடு உள்பட 8 இடங்களில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் நேற்று விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். சென்னிமலை முதல் குருவரெட்டியூர் வரை உயர் அழுத்த மின்கோபுரங்களுக்கு நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மூலக்கரை பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள விவசாய நிலப்பகுதியில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம்.பழனிச்சாமி, விடியல்சேகர், த.மா.கா. செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், தற்சார்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பொன்னையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் ஜெகநாதன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சிகளை சேர்ந்தவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

தற்சார்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் பொன்னையன் பேசும்போது, ‘இது நமது நில உரிமை போராட்டம். விவசாயிகள் தங்கள் நிலத்தை பாதுகாக்க ஆட்சியாளர்களிடம் போராடுகிற இந்த போராட்டத்தில் பாதிக்கப்படுகிறவர்கள் மட்டும் கலந்து கொண்டால் போதாது. உயர் அழுத்த மின்கோபுரம் மற்றும் சாலை திட்டங்களுக்காக, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுகள் விவசாய நிலங்களைத்தான் கை வைக்கின்றன. இதை அனுமதிக்கக்கூடாது.

இன்று ஒரு விவசாயிக்கு பிரச்சினை என்றால் அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட்ட களத்துக்கு வரவேண்டும். முத்தாயிபாளையத்தில் பெண்கள் மண்ணோடு மண்ணாக புரண்டு கதறி நடத்திய போராட்டம், இதுவரை ஈரோடு மண் கண்டிராதது. அதுபோன்ற போராட்டங்கள் தொடர வேண்டும். ஏன் என்றால், நமது உரிமையை, நமது நில உரிமையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்றார்.

மாலையில் தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைத்தலைவர் டில்லிபாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சென்னிமலை பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.முத்துவிஸ்வநாதன், பவானி கவின் உள்பட பலர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் வடிவேல், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பெண்கள் ஏராளமாக பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. இரவிலும் சிலர் பந்தலிலேயே தங்கி இருந்தனர்.

தொடர் போராட்டமாக இது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்ட களம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story