ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: முற்றுகை போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 37 பேர் கைது


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: முற்றுகை போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 37 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:30 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய, மக்கள் அதிகாரம் அமைப்பினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அது கலவரமாக மாறியது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று வாதாடியது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று திருச்சி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக திரண்டனர். ஆனால், போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவிலை. மாறாக, போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி தலைமையில் அங்கு கண்டோன்மெண்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் நேற்று காலை 11.30 மணிக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர். மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும் என கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களில், சிலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரின் உருவ முகமூடியை அணிந்தபடி வந்தனர். பின்னர் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா, மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு வீழ்ந்து கிடப்பதை போன்று முகமூடி அணிந்த 13 பேரும் காட்சிப்படுத்தப்பட்டு சாலையில் கிடந்தனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 37 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.

Next Story