கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் சாவு: நிர்வாகி உள்பட 7 பேர் கைது


கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் சாவு: நிர்வாகி உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 3:45 AM IST (Updated: 18 Dec 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 14 பேர் பலியானார்கள். மேலும் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஹனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது சின்னப்பியின் மகன் லோகேஷ் கூறும்போது, எனது தந்தை சின்னப்பிக்கும், மாதேசுக்கும் இடையே கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்தது. இதனால் எனது தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும்என்ற நோக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரி ஒருவரின் ஆலோசனைப்படி பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக தமிழ்நாடு பூசாரியை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்று கூறினார். இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரியை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்டு 14 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி சின்னப்பி, அவரது மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி, அதேப்பகுதியை சேர்ந்த 3 பேர் என 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304(மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்)-ன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் நிருபர்களிடம் கூறுகையில், கோவில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் உயிரிழந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகி சின்னப்பி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்த எனது தலைமையில் ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது துணை போலீஸ் சூப்பிரண்டு புட்டமாதய்யா தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story