ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 9:00 PM GMT)

ஆற்றில் மணல் அள்ள அனுமதி கேட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் திரண்டு வந்த பெரம்பலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மற்ற மாவட்டங்களை போல் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பெரியாறு உள்ளிட்ட ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்

மாவட்டத்தில் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி மற்றும் மாடுகள் வாங்குவதற்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மீது போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொய் வழக்குகள் போடுவதை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் வெறும் மாட்டு வண்டியை ஓட்டி சென்று போனாலும் போலீசார் தரக்குறைவாக பேசி அடிக்கும் செயலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கோரிக்கைகள் தொடர்பான மனுவினை பெரம்பலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் ஆலத்தூர் தாலுகா கூடலூர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்களை கையில் ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.

தொடர்ந்து வேப்பந்தட்டை தாலுகா சாத்தனவாடி கிராம ஆதிதிராவிடர் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து புதிய சிமெண்டு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

சிறுகுடல் பால் உற்பத்தியாளர்கள் கொடுத்த மனுவில், சிறுகுடல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்த, சங்கத்தின் முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் முத்துசாமி கடந்த செப்டம்பர் மாதம் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதால், அவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கஜா புயல் நிவாரண பணிகளுக்காக பெரம்பலூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் பாலகுருமூர்த்தி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினர்.

Next Story