தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகுவதை தடுக்க விவசாயத்திற்கு மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகுவதை தடுக்க விவசாயத்திற்கு மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:15 AM IST (Updated: 18 Dec 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர் கருகுவதை தடுக்க விவசாயத்திற்கு மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் ஒரு பேரூராட்சி மற்றும் 39 ஊராட்சிகள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமே விவசாயம் நடைபெற்று வந்தது. கஜா புயலின் தாக்குதலால் தென்னை, வாழை, கரும்பு, பலா உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த நிலையில் பல சிரமங்களுக்கு இடையே கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டு உள்ள சம்பா நெல் பயிர்களாவது கைகொடுக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் புயல் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் கறம்பக்குடி பகுதியில் விவசாயத்திற்கான மின் இணைப்பு 10 சதவீதம் கூட வழங்கவில்லை. இதனால் ஆழ்குழாய் பாசனம் செய்ய முடியாமல் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள், புயலில் தப்பிய பொங்கல் கரும்புகள் போன்றவை கருக தொடங்கி உள்ளன. கட்டுப்படியான விலை இல்லை என்ற போதிலும் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்து இருந்த விவசாயிகள் பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.

இதற்கிடையே கறம்பக்குடி பகுதியில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், வெளியூர்களில் வந்திருந்த மின்வாரிய ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். விவசாயத்திற்கான மின்சாரம் வழங்காமலேயே ஊழியர்கள் திரும்பஅனுப்பப்பட்டு விட்டனர். இதனால் விவசாயத்திற்கு மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக மின்சாரம் வினியோகிக்க கோரியும் நேற்று கறம்பக்குடி மின்வாரிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல துவார், கருப்பட்டிபட்டி, ஆயப்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் விவசாய மின் இணைப்பு கேட்டு சாலை மறியல் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமசரம் செய்தனர். இதனால் அந்த பகுதிகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story