உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

சுல்தான்பேட்டை,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம், மாநில அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவை சார்பில், தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 11 உயர் மின்கோபுரங்கள் திட்டங்களை விவசாய நிலங்களின் வழியாக நிறைவேற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.

இத்திட்டத்தால் விளைநிலம் மதிப்பு குறைவதுடன் சாகுபடியும் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவித்து, பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த 3 ஆண்டுகளாக பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கைகளான உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை தமிழக அரசு பரிசீலிக்கவில்லை. இதனிடையே மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது சில இடங்களில் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், போலீசார் மற்றும் வருவாய் துறையினரை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி, மிரட்டி திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கும் வேலைகளை செய்யப்பட்டு வருவதாக சில விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

போலீசார், வருவாய் துறையினரின் இந்த போக்கை கண்டித்தும், சாலையோரமாக கேபிள் பதித்து இந்த மின் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் 8 இடங்களில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் தனியார் கல்லூரி அருகே நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தில் பல இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, சூலூர் முன்னாள் எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன் (தே.மு.தி.க.), தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.கே.முத்துமாணிக்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் டாக்டர் தங்கராஜ், ஏர் முனை சுரேஷ் உள்பட பல்வேறு அரசியல் மற்றும் அமைப்பினர், விவசாய அமைப்பு நிர்வாகிகள் இந்த போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்து பேசினர்.


Next Story