மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை; திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 5:15 AM IST (Updated: 18 Dec 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் பிச்சம்பாளையம் குமாரசாமி நகரை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 23). கட்டிட தொழிலாளி. இவரும், அவருடைய நண்பர்களான 16 வயதுடைய 2 பேரும் சேர்ந்து கடந்த 24-4-2015 அன்று மாலை கோல்டன் நகர் அருகே ராதாநகர் பகுதியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது 15 வயது பள்ளி மாணவியை 18 வயது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து, ராதாநகர் காட்டுப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

இதை கவனித்த அருண்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன், பிரேஸ்லெட், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்ததுடன் அவரை அங்கிருந்து அடித்து விரட்டினார்கள். பின்னர் அந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து காட்டுக்குள் தூக்கி சென்றனர். அன்று இரவு முழுவதும் அருண்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை மாறி, மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மறுநாள் காலையில் அந்த மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நடந்த சம்பவம் பற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். உடனடியாக அவருடைய பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தேனியை சேர்ந்த அந்த மாணவியின் பெற்றோர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். தேனியில் படித்து வந்த மாணவி விடுமுறைக்காக திருப்பூருக்கு வந்து பெற்றோருடன் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்று விட, தனக்கு அறிமுகமான 18 வயது வாலிபர் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்ததால் அதில் ஏறி பயணம் செய்ய மாணவி விரும்பியுள்ளார். அவ்வாறு அவர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று 2 பேரும் பேசிய நேரத்தில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் அவருடைய நண்பர்களான 16 வயதுடைய 2 பேர் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அருண்குமாரின் நண்பர்கள் 2 பேரும் இளம் சிறார்கள் என்பதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அருண்குமார் தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாணவியை காட்டுக்குள் தூக்கிச்சென்று விடிய, விடிய பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Next Story