நாகர்கோவில் டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


நாகர்கோவில் டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் டாஸ்மாக் கடை அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள பாழடைந்த கட்டிட பகுதியில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர், வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கல்லால் தாக்கிய நிலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கோடுபோட்ட ரெடிமேடு சட்டை, வெள்ளை நிற பனியன், நீலநிறத்தில் கட்டம் போட்ட லுங்கி ஆகியவை அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர் நேற்று முன்தினம் இரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவருக்கு பக்கத்தில் தண்ணீர் பாட்டில் மற்றும் மது பாட்டில் ஆகியவை கிடந்தது. பிணமாக கிடந்த பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையும் உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வருபவர்கள், பாழடைந்த கட்டிடப்பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.

அதேபோல் பிணமாக கிடந்தவரும் மதுபானம் வாங்கி வந்து நேற்று முன்தினம் இரவு பாழடைந்த கட்டிடப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியிருக்கலாம் என்றும், அப்போது அவருடன் மது அருந்த வந்தவருடனோ அல்லது அங்கு ஏற்கனவே மது அருந்திக்கொண்டிருந்த நபருடனோ தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இந்த தகராறில் அவர் கல்லால் தாக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசாரால் சந்தேகிக்கப்பட்டது.

அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் வடசேரி அறுகுவிளையைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 45) என்பது தெரிய வந்தது. கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் அடிக்கடி மதுகுடித்துவிட்டு பிறரிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. எனவே சம்பவ இடத்தில் மதுகுடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ராஜேசை மர்ம நபர் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பின்னர் ராஜேஷ் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கொலை செய்தவர் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உதவி சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது, “பிணமாக கிடந்த ராஜேஷ் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பாரோ? என்று சந்தேகிக்கிறோம். அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மே லும் போலீஸ் மோப்பநாய் மூலமும் தடயங்களை சேகரித்துள்ளோம். எத்தனை பேர் சேர்ந்து கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்“ என்றார். 

Next Story