பிரதமர் மோடி இன்று மும்பை வருகை ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்


பிரதமர் மோடி இன்று மும்பை வருகை ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:02 AM IST (Updated: 18 Dec 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி இன்று மும்பை வருகிறார். அவர் ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் வைக்கிறார்.

மும்பை,

மராட்டிய அரசு நிறுவனமான மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) தனது எல்கைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண்- பிவண்டி- தானே இடையே 5-வது மெட்ரோ வழித்தடத்தையும், தகிசர்- பயந்தர் இடையே 9-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தையும் அமைக்க இருக்கிறது.

இதில், 5-வது மெட்ரோ ரெயில் திட்டம் 24.9 கி.மீ. தூரத்துக்கு ரூ.8 ஆயிரத்து 416 கோடி செலவிலும், 9-வது மெட்ரோ ரெயில் திட்டம் 10.3 கி.மீ. தூரத்துக்கு ரூ.6 ஆயிரத்து 607 கோடி செலவிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்விரு மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) தானே மாவட்டம் கல்யாணில் நடக்கிறது. இந்த திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இத்துடன் சேர்த்து அவர் ரூ.41 ஆயிரம் கோடி செலவிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மும்பை வருகிறார்.

மும்பையில் செய்தி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பின்னர் கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ‘டைம்லெஸ் லக்சுமண்' என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்.

அதன்பின்னர் கல்யாண் செல்லும் அவர் 5 மற்றும் 9-வது மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது, நவிமும்பையில் நகர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான சிட்கோ பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் கோடி செலவில் 89 ஆயிரத்து 771 மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி புனே செல்கிறார். அங்கு புனே பெருநகர வளர்ச்சிக்குழுமம் செயல்படுத்தும் 3-வது மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Next Story