சாத்தூர் அருகே கல்லூரி பேராசிரியருக்கு கத்திக்குத்து; கள்ளக்காதலனுடன் மனைவி கைது


சாத்தூர் அருகே கல்லூரி பேராசிரியருக்கு கத்திக்குத்து; கள்ளக்காதலனுடன் மனைவி கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 5:28 AM IST (Updated: 18 Dec 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனுடன்அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மீனாட்சிபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் ராஜவேலுமுருகன்(வயது37). ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி வனிதா(30). வனிதாவின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள வெங்கடேசபுரம் ஆகும்.

ராஜவேலுமுருகன் முன்பு கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் வேலை செய்தார். அங்கு வனிதா படித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிட்டராக இருக்கும் அருண்பாண்டியன் (24) என்பவருக்கும் வனிதாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது கள்ளத்தொடர்பாக மாறி ராஜவேலுமுருகன் வேலைக்கு சென்றதும் வனிதாவின் வீட்டுக்கு அருண்பாண்டியன் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்த கள்ளத்தொடர்பு தெரியவந்ததும் இருவரையும் ராஜவேலுமுருகன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் இருவரும் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கல்லூரி முடிந்து ராஜவேலுமுருகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வனிதாவும் அருண்பாண்டியனும் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே அருண்பாண்டியன் வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜவேலுமுருகனை குத்தியுள்ளார். வயிற்றில் கத்திக்குத்து விழுந்த ராஜவேலுமுருகன் அபயகுரல் எழுப்பினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜவேலுமுருகனை உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே அக்கம்பக்கத்தினருக்கு மிரட்டல் விடுத்து அருண்பாண்டியன் ஓட்டம் பிடித்தார். எனினும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள சாத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடமும் வனிதாவிடமும் விசாரணை நடந்தது.

அருண்பாண்டியன் வீடு புகுந்து தம்மிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் கணவருக்கு கத்திக்குத்து விழுந்ததாகவும் நாடகமாடியுள்ளார். எனினும் தீவிர விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து வனிதா மற்றும் அருண்பாண்டியனை போலீசார் கைது செய்தார்கள்.

Related Tags :
Next Story