தஞ்சையில் அரசு பள்ளிகளில், 11 அறைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


தஞ்சையில் அரசு பள்ளிகளில், 11 அறைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 10:22 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், அரசு பள்ளிகளில் 11 அறைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான திருடனின் உருவத்தை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை தென்கீழ் அலங்கம் பகுதியில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே தொடக்கப்பள்ளியும் உள்ளது. இந்த பள்ளிகளின் அருகே சத்துணவுக்கூடமும் உள்ளது. வழக்கம் போல நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ஊழியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

நேற்று காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் வடிவேல் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் ஓய்வு அறை, சத்துணவு சமையல் பொருட்கள் வைத்திருந்த அறை, வகுப்பறை, சத்துணவு சமையல் கூட அறை, தொடக்கப்பள்ளிகளில் இருந்த 2 வகுப்பறைகள் என 11 அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்


தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை மட்டும் உடைக்க முடியவில்லை. அந்த அறையில்தான் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதையடுத்து தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை திறந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

 அப்போது நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் அங்கு வந்து, சமையல் செய்யும் இரும்பினால் ஆன நீள கரண்டியை கொண்டு பூட்டுகளை உடைப்பது அந்த காட்சியில் பதிவாகி இருந்தது. அந்த நபர் தான் ஆசிரியர்களின் ஓய்வறையையும் உடைத்து அங்கு இருந்த ரூ.3 ஆயிரத்து 500–ஐ திருடிச்சென்றது தெரிய வந்தது.


இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை கொண்டு பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story