புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரிரு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் தகவல்


புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரிரு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:30 AM IST (Updated: 19 Dec 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரிரு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அகரகடம்பனூர் ஊராட்சி தெற்கு தெருவில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மீனா, கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ், கீழ்வேளூர் ஒன்றிய துணை செயலாளர் தையல்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிளை செயலாளர் சம்பத் வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத் தினர். அதைபோல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் மட்டும் தான் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிவாரண பணிகளில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தெற்கு தெரு பகுதி மக்கள் சாலை மிகவும் மோசமாக உள்ளதாக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த சாலை இன்னும் ஒரு மாதத்தில் தார்சாலையாக மாற்றி தரப்படும் என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக கீழ்வேளூர் ஒன்றியம் கடலாக்குடி, பூராத்தான்குடி, அகரகடம்பனூர் ஊராட்சி தெற்குதெரு, நேரு நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 220 மாற்று கட்சியினர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். விழாவில் நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன், கீழ்வேளூர் பேரூர் செயலாளர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கைலாசம் நன்றி கூறினார்.

Next Story