கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் முத்தரசன் பேட்டி


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 7:05 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருவாரூர்,

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. திருவாரூரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புயல் கரையை கடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடியவில்லை. புயலுக்கு பின்னர் பல கிராமங்களில் மின் வினியோகம் செய்யப்படவில்லை. உயிரை பணையம் வைத்து பணியாற்றி வரும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டனத்துக்கு உரியது. அனைத்து வழக்குகளையும் போலீசார் வாபஸ் பெற வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள் போதுமானதாக இல்லை. நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு கோரிய ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story