ராஜீவ் கொலைக் கைதிகளை விடுப்பது குறித்து “கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது குறித்து கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் கைதி ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான எனது மகன் ரவிச்சந்திரன் கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். சிறையில் கடந்த 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன், தண்டனையை கழித்துவிட்டபோதும், அவர் விடுவிக்கப்படவில்லை. சிறையில் இருந்த நாட்களில் 4 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் வெளியில் வந்துள்ளார். தற்போது எனக்கு 62 வயதாகிவிட்டது. அடிக்கடி நோய் வாய்ப்பட்டு அவதிப்படுகிறேன். சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை தனியாக கையாள முடியாத நிலையில் உள்ளேன்.
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில், 7 பேரையும் விடுவிக்கிறோம் என்று தமிழக அரசு சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை தமிழக கவர்னரின் பரிந்துரைக்கும், ஒப்புதலுக்கும் மாநில அரசு அனுப்பியுள்ளது.
ஆனால் கவர்னர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். எனவே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்ற உத்தரவு வரும் வரை எனது மகன் ரவிச்சந்திரனுக்கு நீண்ட கால பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் டி.திருமுருகன், ‘‘ரவிச்சந்திரனுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரினார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை குறித்து கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த நிலையில் நீண்டகால விடுப்பு கேட்பார்களேயானால், அதுதொடர்பாக முடிவெடுப்பதில் சிக்கல் உள்ளது. எனவே மனுதாரர் முறையான காரணத்துடன் விண்ணப்பித்தால், 10 நாள் பரோல் வழங்க தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.