மணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது
தென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் அள்ளி கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று ஆற்றின்கரையோர கிராமங்களில் தாசில்தார் மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து எச்சரிக்கை விடுத்தனர்.
பாகூர்,
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி நேற்றுமுன்தினம் காலை பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து மணல் திருட்டு முற்றிலும் ஒழிக்க வேண்டும் உத்தரவிட்டார்.
மேலும் மணல் திருட்டை தடுக்கும் வகையில், தற்போது 3 ஆக உள்ள பீட் ஆபிசர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு (2019) மணல் திருட்டு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மணல் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
கவர்னர் ஆய்வை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் தலைமையிலான பாகூர் போலீசார் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் மணல் கடத்தலை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வருவாய்துறை மணல் கடத்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததன்படி சோரியாங்குப்பத்தில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வைத்திருந்த 6 வண்டிகள் பறிமுதல் செய்தனர். அந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மணல் கடத்தலில் ஈடுபடுவது குற்றம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
மேலும் தென்பெண்ணையாற்றில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, எனவே ஆற்றில் மணல் எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். ஒருமுறை வழக்குப்பதிவு செய்தவர்கள் மீண்டும் மணல் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். மேலும் இது சம்பந்தமாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் கூட்டம் புதன்கிழமை (இன்று) மாலை பாகூர் போலீஸ் நிலையத்தில் நடைபெறுகிறது. அதில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெருத்தெருவாக சென்று தெரிவித்து வந்தனர்.
மேலும் ஆற்றில் இருந்து அள்ளப்பட்டு சூரியன்குப்பம் பகுதியில் பதுக்கப்பட்டிருந்த மணலை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 லாரி மற்றும் ஒரு டிராக்டர் மணல் பறிமுதல் செய்யப்பட்டு கட்டிட கட்டுமான அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.