விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்கள் வருகை கலெக்டர் தகவல்


விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்கள் வருகை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 8:31 PM GMT)

விவசாய மின் இணைப்பு வழங்குவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்கள் வருகின்றனர் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்குவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற மீட்பு பணிகள் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக புயல் ஏற்பட்டவுடன் உடனடியாக பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உள்ளூர், பிற மாவட்ட மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 500 மின்வாரிய ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர பணிகளின் காரணமாக மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கென புதுக்கோட்டை மாவட்ட மின் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்கள் வர உள்ளனர். இந்த பணிக்கு தேவையான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் வந்துள்ளன. விவசாய மின்இணைப்பு வழங்கும் பணியினை கண்காணித்து விரைந்து பணிகளை முடித்திட மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story