கீழக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 19½ பவுன் நகை –ரூ.1 லட்சம் கொள்ளை
கீழக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து 19½ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன்(வயது 53). மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது மனைவியின் தாயார் இறந்து விட்டதால் முருகேசன் தனது குடும்பத்துடன் தட்டான்தோப்பு பகுதியில் உள்ள மாமியாரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 19½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் உடைத்த பூட்டுக்கு பதிலாக வேறு ஒரு பூட்டை போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மாமியாரின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு நேற்று காலை முருகேசன் வீடு திரும்பினார். அப்போது தனது வீட்டில் வேறு பூட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் உத்தரவின்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.