பட்டாசு ஆலைகளை திறக்க கோரி 5 கிராம மக்கள் நடைபயணம்; சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு


பட்டாசு ஆலைகளை திறக்க கோரி 5 கிராம மக்கள் நடைபயணம்; சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 20 Dec 2018 5:15 AM IST (Updated: 20 Dec 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி 5 கிராம மக்கள் நடைபயணமாக வந்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

சிவகாசி,

பட்டாசு உற்பத்திக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை தளர்த்த கோரி, விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வந்த 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பட்டாசு ஆலைகளை உடனே திறக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன.

வேலையின்றி தவித்து வரும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்புக்கொடி காட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்தில் உள்ள ஆனையூர், அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், காந்திநகர், சிலோன் காலனி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 500–க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் சுவாமிநாதன் தலைமையில் நடை பயணம் மேற்கொண்டனர்.

பட்டாசு ஆலைகளை உடனே திறக்க உரிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.

அங்கு கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுக்க முயன்றனர். கோட்டாட்சியர் தினகரன் அலுவலக பணி காரணமாக வெளியூர் சென்று இருந்ததால் அவர் வரும் வரை காத்திருப்பதாக 5 கிராமத்தை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் காத்திருந்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர். பின்னர் தாலுகா அலுவலகத்திலும் பட்டாசு ஆலைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story