அரசு பஸ் மீது மினி லாரி மோதி டிரைவர், கண்டக்டர் உள்பட 13 பேர் காயம்


அரசு பஸ் மீது மினி லாரி மோதி டிரைவர், கண்டக்டர் உள்பட 13 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 9:44 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே அரசு பஸ் மீது மினிலாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் லளிகம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (வயது 43) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக மாரண்டஅள்ளியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இருந்தார்.

அந்த பஸ்சில் 10 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே பவர்கிரீடு பக்கமாக சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி பெயிண்ட் பாரம் ஏற்றி வந்த மினி லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையின் மறுதிசைக்கு வந்து அரசு பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் முன்புறம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் பஸ்சில் இருந்த 10 பயணிகள் மற்றும் டிரைவர் மகாலிங்கம் ஆகியோர் காயம் அடைந்தனர். அதே போல பஸ்சின் கண்டக்டர் மணிகண்டனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் மினிலாரியின் கிளனராக இருந்த மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மருது (31) என்பவர் காயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் அங்கு சென்று காயம் அடைந்த 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ் மற்றும் மினி லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒருவரை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு பாபு என்பவர் கிருஷ்ணகிரி நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த ஆம்புலன்ஸ் டேம் ரோட்டில் உள்ள பாலத்தை கடக்க முயன்றது. அந்த நேரம் டேம் ரோட்டில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி பூ ஏற்றி கொண்டு ஒரு வாகனம் வந்தது.

அந்த வாகனம் மீது மோதாமல் இருக்க ஆம்புலன்சை திருப்பிய போது அந்த பகுதியில் நிறுத்தி இருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருந்து தவிடு பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி கிருஷ்ணகிரி நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி ஒரப்பம் அருகே வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள ஓடப்பட்டுவைச் சேர்ந்த டிரைவர் சரவணன் (35) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story