நாகையில் 11-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


நாகையில் 11-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 7:12 PM GMT)

நாகையில் 11-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

பட்டா மாறுதல், கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்துதல், கிராம நிர்வாக பதவியை தொழில்நுட்ப பதவியாக அறிவித்தல், கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, இணையதள வசதிகள் அமைத்தல், குடிநீர், கழிவறை மற்றும் மின்வசதி செய்ய வேண்டும். குறைதீர்க்கும் கூட்டங்களை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்றும் 11-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.

அதனை தொடர்ந்து நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திருவாரூர், நாகையை சேர்ந்த 16 வட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் வேதை.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகீர் உசேன், திருவாரூர் மாவட்ட தலைவர் கதிர், மக்கள் தொடர்பு செயலாளர் செந்தில்குமார், மகளிர் பிரிவு செயலாளர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட தலைவர்கள் மாரியப்பன், ரங்கநாதன், குமரவடிவேல், முரளி, நவநீதம், திருமலை சங்கு, ஜெயபிரகாஷ், பிரபாகரன், முருகையன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story