படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மறியல் 10 பேர் கைது


படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மறியல் 10 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 21 Dec 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் வேப்பங்குழி கிராமத்தில் ரெயில்வே கேட் அருகே அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து படைப்புழுவால் தாக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்காச் சோளபயிர்களை கையில் வைத்துக்கொண்டும், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிய வாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு சிறந்த மக்காச்சோளப்பயிர் சாகுபடி செய்ததற்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.5 கோடி பரிசு பெற்ற அரியலூர் மாவட்டம் இந்த ஆண்டு 5 மூட்டை கூட சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின்படி மருந்துகள் பயன்படுத்தியும், எந்தவித பலனும் இல்லை. நாங்கள் அனைவரும் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் கடன் பெற்று ஏக்கருக்கு ரூ.27 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டு இருக்கிறோம்.

இப்போது அனைத்து பயிர்களும் இந்த படைப்புழு தாக்கத்தால் வீணானதால் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் அமெரிக்க விதை உற்பத்தி நிறுவனங்களே. இந்த நிறுவனங்கள் திட்டமிட்டே இந்திய விவசாயத்தை அழிப்பதற்காகவே நார்வாய் எனும் பூச்சி முட்டைகளை விதையிலேயே வைத்துக்கொடுத்து அப்பாவி விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு விதை நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று விவசாயிகளுக்கு வழங்கியது போல், தமிழ்நாட்டிற்கும் விதை நிறுவனங்களிடம் இருந்து நஷ்டஈடு பெற்று ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இது போன்ற பூச்சி தாக்குதல் நிலை ஏற்படாமல் இருக்க விதை நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாவட்டத்திற்கு ஒரு விதை பரிசோதனை ஆய்வாளர் மட்டுமே இருக்கிறார். இதனால் விவசாயத்தின் மீது தமிழக அரசு அலட்சியம் காட்டுவது போல் ஆகிறது. ஆகவே அதிகமான விதை பரிசோதனை ஆய்வாளரை நியமித்து ஆய்வு செய்து தரமான விதைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட விவசாய சங்க நிர்வாகி சின்னத்துரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் செந்தில்குமார், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 10 விவசாய சங்க நிர்வாகிகளை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story