மும்பையில் பெண் என்ஜினீயரை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை கீழ்கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது
மும்பையில் பெண் என்ஜினீயரை கற்பழித்து கொன்றவருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.
மும்பை,
மும்பையில் பெண் என்ஜினீயரை கற்பழித்து கொன்றவருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.
பெண் என்ஜினீயர்
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரின் மகள் மும்பை கோரேகாவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
23 வயதான அவர், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி ரெயிலில் மும்பை திரும்பினார்.
அதிகாலை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த அவர் திடீரென மாயமானார்.
கற்பழித்து கொலை
இதையறிந்து கலக்கம் அடைந்த அவரது தந்தை மும்பை வந்து போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், மாயமான பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் 11 நாட்களுக்கு பிறகு பாண்டுப் பகுதியில் உள்ள ஓடைப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. பிரேத பரிசோதனையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், 2 மாதத்துக்கு பிறகு சந்திரபான் சனப் (30) என்பவர் கைதானார்.
அவர் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்தில் அறிமுகம்
சம்பவத்தன்று அந்த நபர் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்துக்கு வந்து இருந்தார். அப்போது தான், அங்கு ரெயிலில் வந்து இறங்கிய அப்பெண்ணிடம் டாக்சி டிரைவர் என அறிமுகமானார்.
இதை நம்பிய அந்தப் பெண் அவருடன் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு டாக்சி இல்லை. பெண்ணிடம் அவர் ரூ.300 தந்தால் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விடுதியில் விடுவதாக கூறினார்.
இது பெண்ணுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. அப்போது, சந்திரபான் சனப் அவரிடம் சந்தேகம் இருந்தால் எனது மோட்டார்சைக்கிள் நம்பரை குறித்து கொள்ளுங்கள், உங்களது தந்தைக்கு வேண்டுமானாலும் போனில் தகவல் சொல்வி விடுங்கள் என்று சொன்னார்.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இதனால் அவர் மீது அப்பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. எனவே அவர் சந்திரபான் சனப்புடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். மோட்டார்சைக்கிளில் அவரை கிழக்கு விரைவு சாலை வழியாக பாண்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஓடை அருகே நிறுத்தினார்.
அங்கு புதருக்குள் தள்ளி பெண்ணை கொடூரமாக கற்பழித்து விட்டு, அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றார்.
உடல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மோட்டார்சைக்கிள் டேங்கரில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பினார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் மும்பை மகளிர் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
தூக்கு தண்டனை
இந்த வழக்கில் சந்திரபான் சனப்புக்கு சிறப்பு கோர்ட்டு தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறியது.
இந்த தண்டனையை எதிர்த்து சந்திரபான் சனப் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அரசு தரப்பில் அவரது மரண தண்டனையை உறுதி ெசய்ய வேண்டி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்களையும் நீதிபதிகள் ரஞ்சித் மோரே, பாரதி டாங்கரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒரே நேரத்தில் விசாரித்தது.
ஐகோர்ட்டில் நடந்த விசாரணை நிறைவில், சந்திரபான் சனப் மீதான கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
உறுதி செய்து தீர்ப்பு
இந்த வழக்கில் நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது, சந்திரபான் சனப்புக்கு கீழ் கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். மேலும் சந்திரபான் சனப்பின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொடுஞ்செயலை செய்த போது, சந்திரபான் சனப் கொஞ்சம் கூட வருந்தவில்லை. அவரது இந்த செயல் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. அவர் இந்த சமுதாயத்திற்கே பெரிய அச்சுறுத்தல் என்று கூறினர்.
Related Tags :
Next Story