சென்னை மாநகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?


சென்னை மாநகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?
x
தினத்தந்தி 21 Dec 2018 5:06 AM IST (Updated: 21 Dec 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை, 

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் உள்ள தண்ணீர் பூர்த்தி செய்து வருகிறது. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூண்டி ஏரியில் பெறப்படும் தண்ணீரை இந்த ஏரிகளில் நிரப்பி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், குடிநீர் தேவைக்கான தண்ணீர் எடுக்கப்படுவதாலும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதேபோன்று சோழவரம் ஏரியும் வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த 2 ஏரிகளும் வறண்டு விட்டால், வரும் கோடை காலத்தில் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

எதிர்பார்த்த மழை இல்லை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாததால் ஏரிகளில் நீர்மட்டமும் உயரவில்லை.

நேற்றைய நிலவரப்படி இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 1.548 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு இருந்தது. அதில் குறிப்பாக பூண்டி ஏரியில் 345 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. இங்கிருந்து குடிநீர் தேவைக்கு 30 கன அடி, புழல் ஏரியில் இருந்து 90 கன அடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 25 கன அடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை மூலம் ஏரிகளில் போதிய நீரை சேகரிக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் 74 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போது வரை 34 செ.மீ. மட்டுமே மழை பெய்து உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மழை நீர் சேகரிப்பு குழாய்கள் மூலம் முறையாக மழைநீரை சேமிக்க முடியவில்லை. சோழவரம் ஏரி வறண்டு போனாலும், பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மொத்தம் 1.5 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதனை வைத்து ஓரளவு நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், கடல் நீரை குடிநீராக்கும் மையங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 1.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதுதவிர சென்னையில் உள்ள நீர் நிலைகளில் இருந்தும் குடிநீர் எடுக்க முடியுமா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story