கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் 300 பேர் கைது


கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் 300 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 1:55 PM GMT)

வேலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், கணினி மற்றும் இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊர்வலம் என பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வந்தனர். 12–வது நாளான நேற்று அவர்கள் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதனையொட்டி கலெக்டர் அலுவலக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

செயலாளர் ரகு, பொருளாளர் சுந்தரேசன், வட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் கிராம நிர்வாக அலுவலர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story