உயிர் உள்ளவரை 8 வழிச்சாலைக்கு நிலம் தர மாட்டோம் கலெக்டரிடம் விவசாயிகள் ஆவேசம்
உயிர் உள்ளவரை 8 வழிச்சாலைக்கு நிலம் தர மாட்டோம் என்று கலெக்டர் கந்தசாமியிடம விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.
திருவண்ணாமலை,
சென்னை – சேலம் இடையே 278 கிலோ மீட்டர் தூரம் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் உள்பட 5 மாவட்டங்கள் வழியாக பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலங்கள் அளவு செய்து கல் நட்டனர்.
இந்த 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு 8 வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ய இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி இந்த 8 வழிச்சாலைக்கு நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப் போவதாகவும், எனவே, விவசாயிகள் தங்கள் கருத்துகளை 21 நாட்களில் தெரிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்து கடந்த 17–ந் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சென்னை– சேலை 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ள பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள 8 வழிச்சாலை நில எடுப்புப் பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் வரை சென்றனர்.
அப்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ஸ்ரீதரன் மற்றும் போலீசார் உடன் சென்றனர்.
8 வழிச்சாலை நில எடுப்புப்பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை தாண்டியும் அவர்கள் தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் தடுத்தனர். இதையடுத்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் வரை சென்றுவிட்டு, பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக கூறினார்.
கலெக்டர் அலுவலகம் அருகில் சென்றதும் அவர்கள், நாங்கள் கலெக்டரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க உள்ளதாக கூறினர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுகிறது. நாங்களும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் கூறினர். தொடர்ந்து போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து விவசாயிகள் கலெக்டர் நுழைவுவாயில் அருகில் தரையில் அமர்ந்து கலெக்டரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அங்கு வந்தார். அவரிடம் விவசாயிகள் ஆவேசமாக கூறியதாவது:–
8 வழிச்சாலை அமைக்கப்படுவதால் விவசாயிகள் பலர் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் ஒன்று சேர்ந்து பேச முடியவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும் போலீசார் தொடர்ந்து எங்களை கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்தில் 8 வழிச்சாலையினால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் அவர் உடல்நலக் குறைவால் தற்கொலை சென்று வழக்கை முடித்து விட்டனர். தமிழக முதல்–அமைச்சர் 8 வழிச்சாலை தொடர்பாக மாறி, மாறி புள்ளி விவரங்களை தெரிவித்து வருகிறார்.
அதிகாரிகள் முதல் அமைச்சருக்கு தவறான புள்ளி விவரங்களை தெரிவிக்கின்றனர். 8 வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுக்கு எந்தவித தகவல்களும் தெரிவிக்கவில்லை. ஆட்சேபனை மனு அளித்தால் சம்பந்தப்பட்ட துறையில் இருந்து சரியான பதில் வருவது இல்லை.
இருக்கும் சாலையை அகலப்படுத்தாமல் 8 வழிச்சாலை அமைக்கப்படுவது ஏன்?. 8 வழிச்சாலைக்காக நாங்கள் நிலத்தை கொடுத்து விட்டு, வாழ்வாதாரத்திற்கு நாங்கள் என்ன செய்வோம். அதனால் எங்கள் உயிர் உள்ளவரை 8 வழிச்சாலைக்கு நிலம் தர மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் கலெக்டர் பேசுகையில், 8 வழிச்சாலை தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் இதுகுறித்து எந்த மனு பெற்றாலும் உடனடியாக பதில் தெரிவிக்கப்படும். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. ஐகோர்ட்டு தீர்ப்பின்படி அனைத்தும் செய்யப்படும் என்றார்.
இதையடுத்து விவசாயிகள் 8 வழிச்சாலை தொடர்பான ஆட்சேபனை மனுவினை கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக இதில் கலந்து கொண்ட பெண்கள் சிலர் தங்கள் நிலத்தை தர மாட்டோம் என்று கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.