காதலை கைவிட கோரி தாய் திட்டியதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


காதலை கைவிட கோரி தாய் திட்டியதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 21 Dec 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளோடு அருகே காதலை கைவிட கோரி தாய் திட்டியதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னிமலை, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளோடு அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன். அவருடைய மனைவி அன்னக்கொடி. இவர்களுடைய மகள் சுகன்யா (வயது 18). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சுகன்யாவின் தூரத்து உறவினர் ஆவார். இதனால் சிறு வயது முதலே சந்தோசுக்கும், சுகன்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் காதலை கைவிட கோரி சுகன்யாவை அவருடைய தாய் அன்னக்கொடி திட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகன்யா வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசில் அன்னக்கொடி புகார் அளித்தார்.

அந்தப்புகாரில், ‘சந்தோஷ் எனது மகள் சுகன்யாவை கடத்தி சென்றுவிட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் வள்ளிபுரத்தான்பாளையத்தில் உள்ள பொதுக்கிணற்றில் சுகன்யா பிணமாக மிதப்பதை நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து சுகன்யாவின் உறவினர்களிடம் கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் வந்து பார்த்துவிட்டு வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலை கைவிட கோரி தாய் கூறியதால் சுகன்யா மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

Next Story