நெய்வேலியில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
நெய்வேலியில் குண்டர் சட்டத்தில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
நெய்வேலி 21-வது வட்டம் நாவலர் தெருவை சேர்ந்தவர் அழகேசன் (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவர் கடந்த 21.11.2018 அன்று அங்குள்ள சித்திரை வீதி மாரியம்மன்கோவிலில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற சிவக்குமார் (21) என்பவர் அழகேசனை வழிமறித்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்து விட்டு தப்பிச்சென்றார். இது பற்றி அழகேசன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்குப்பதிவு செய்து சதீஷ் என்கிற சிவக்குமாரை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இவர் மீது ஏற்கனவே தெர்மல் போலீஸ் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள், டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது.
ரவுடியான இவரின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சதீஷ் என்கிற சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
இதையடுத்து சதீசை நெய்வேலி தெர்மல் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள சதீசிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
Related Tags :
Next Story