புதிய ரக நெல் விளைச்சல் குறித்த விவசாய கருத்தரங்கம்


புதிய ரக நெல் விளைச்சல் குறித்த விவசாய கருத்தரங்கம்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 21 Dec 2018 7:12 PM GMT)

தேவகோட்டை அருகே உள்ள புளியாலில் புதிய ரக நெல் விளைச்சல் குறித்த விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது.

தேவகோட்டை,

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு பருவ மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் மழை சரிவர பெய்யாததால் ஏமாற்றமடைந்தனர். மேலும் தமிழகத்தில் பெரும் புயல் ஏற்பட்டதாலும், இந்த 2 மாவட்டங்களில் போதிய மழை இல்லாததாலும், பெரும்பாலான இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன.

இந்தநிலையில் எம்.ஜி.ஆர்.-1 என்ற புதிய நெல் ரகம் மானாவாரிக்கு என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் யாரும் இதை பயிரிடவில்லை. காரணம் புதிய ரக நெல்லாக இருப்பதால் சரியான விலை கிடைக்காது, வியாபாரிகள் நெல்லை எடுப்பதில் சிரமம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து விட்டனர்.

ஆனால் ஒரு சில கிராமங்களை சேர்ந்த சில விவசாயிகள், புதிய ரக நெல்லை மானாவாரி நிலங்களில் விதைத்தனர். அதில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே இதே நெல்லை இனி வரும் காலங்களில் பயிரிடும் போது நல்ல விளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் எம்.ஜி.ஆர்.-1 என்ற புதிய நெல் ரகம் நன்றாக விளைந்த பகுதிகளில் அதிகாரிகள், மற்ற விவசாயிகளை அழைத்துச் சென்று காண்பித்தனர். 95 நாட்களில் புதிய ரக நெல், நல்ல விளைச்சலை பெற்றுள்ளது.

இதையொட்டி புளியாலை சேர்ந்த விவசாயி சர்பிரசாதம் என்பவர் நிலத்தில் விளைந்த புதிய ரக நெல்லை விவசாயிகள் பார்வையிட்டனர். அப்போது விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். மேலும் புதிய ரக நெல் விளைச்சல் குறித்த விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது.

தேவகோட்டை கோபாலன், உரக்கடை சுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்தாஸ் சவுமியன், புதுவயல் வேளாண்மை உதவி இயக்குனர் தனபாலன், காளையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்நாதன், தேவகோட்டை வேளாண்மை அலுவலர் லட்சுமிதேவி, விதை ஆய்வாளர் வீரையன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். மகா நிறுவனத்தின் இயக்குனர் காமராஜ் இந்த ரகம் பயிரிடப்பட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக விளக்கிக் கூறினார்.

Next Story