சென்னை மெரினா கடற்கரையில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் எல்லை பிரச்சினையால் வழக்கை விசாரிப்பதில் குழப்பம்


சென்னை மெரினா கடற்கரையில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் எல்லை பிரச்சினையால் வழக்கை விசாரிப்பதில் குழப்பம்
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 22 Dec 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா கடற்கரைக்கு தோழியுடன் வந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அடையாறு,

சென்னை மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது தோழியான பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பெற்றோருக்கு தெரியாமல் மெரினா கடற்கரைக்கு வந்தார். இவர் கள் இருவரும் எம்.ஜி.ஆர். சமாதி, அண்ணா சமாதி என பல இடங்களில் சுற்றினர்.

அப்போது வாலிபர் ஒருவர், சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனது அறைக்கு அழைத்துச்சென்று, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமிகளை மிரட்டி இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அந்த வாலிபர், கடற்கரையில் குதிரை ஓட்டுபவர் என்று தெரிகிறது.

போலீசில் புகார்

வீட்டுக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட டாக்டர்கள், சிறுமியிடம் விசாரித்தபோதுதான் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சிறுமியை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

சம்பவம் மெரினா கடற் கரையில் நடைபெற்றதால், இந்த வழக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

எல்லை பிரச்சினை

இந்த நிலையில் இந்த வழக்கு மாற்றப்பட்டது குறித்து இதுவரை தங்களுக்கு தகவல் வரவில்லை என்றும், உரிய தகவல் வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மயிலாப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி 2 சிறுமிகளிடமும் விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்த இடம் மயிலாப்பூர் போலீஸ் நிலைய எல்லையா? அல்லது அண்ணாசதுக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதா? என்ற குழப்பம் நீடிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story