மீன் கடைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் சாலைமறியல் 200 பேர் கைது
மீன் கடைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட 200 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.55 கி.மீ. தூரம் உள்ள லூப் சாலையை ரூ.47 கோடியில் சீரமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து நொச்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை பட்டினப்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை கூட்டம் கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மெரினா லூப் சாலையை மீண்டும் மீனவர்களின் பொது பயன்பாட்டு சாலையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீனவர்களுடைய கடைகளை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை தலைவர் ஆர்.ராமலிங்கம், முன்னாள் துணை தலைவர் கு.பாரதி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் பட்டினப்பாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இதுதொடர்பாக கு.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
நொச்சிக்குப்பம் லூப் சாலையை மீண்டும் மீனவர்களின் பொது பயன்பாட்டு சாலையாக அறிவிக்க வேண்டும். எங்களுடைய மீன் கடைகளை இட மாற்றம் செய்யக் கூடாது. சாந்தோம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story