பட்டாசு தொழில் பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி


பட்டாசு தொழில் பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு போராட்டம் நடத்தியவர்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி
x
தினத்தந்தி 21 Dec 2018 10:45 PM GMT (Updated: 21 Dec 2018 8:04 PM GMT)

பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய பட்டாசு ஆலை தொழிலாளர்கள் இடையே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பட்டாசுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு எடுத்துள்ள முடிவு பட்டாசு தொழிலுக்கும், தொழிலாளர்களும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதுதான் நமது தலைவிதி.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது பசுமை பட்டாசு பற்றி குறிப்பிட்டுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன? என்பது யாருக்குமே தெரியவில்லை. மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கூட இது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. இதற்கு பதில் கூற வேண்டிய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையும் உரிய பதில் தரவில்லை.

இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மட்டும் பசுமை பட்டாசு பற்றி தெரிவதற்கு எப்படி வாய்ப்பு ஏற்படும்? காபி தூள் இல்லாமல் காபி போடச் சொல்கிறார்கள். டீத் தூள் இல்லாமல் டீ போட்டு தரச்சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியம் இல்லையோ அதே போன்று தான் பசுமை பட்டாசு தயாரிப்பதும் சாத்தியம் இல்லை.

இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளோம். மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை மந்திரி மற்றும் செயலரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் நமக்காக பேசி உள்ளார். சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் தற்போது 5 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் இங்கு அமைச்சராக வரவில்லை. உங்களில் ஒருவனாக மனிதாபமிக்க மனிதனாக வந்துள்ளேன். உங்களது பிரச்சினை ஊருக்கு தெரியவேண்டும், உலகுக்கு தெரிய வேண்டும். தெரியவேண்டியவர்களுக்கும், தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கான நடைமுறைகளை உறுதியாக மேற்கொள்வேன்.

நானும் படிக்கும் போது பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்தவன் தான். தீப்பெட்டி ஒட்டியவன் தான். எனக்கு உங்களின் வேதனையும், துன்பமும் நன்கு தெரியும். நீங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. உலகில் எந்தப்பகுதியிலும் பட்டாசுக்கு தடைவிதிக்கப்படவில்லை. சட்டரீதியாக பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை அதே முறையில் தான் அணுகி தீர்வு காணவேண்டும். இதற்கு தீர்வு ஏற்பட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். நாம் ஒன்றிணைந்து போராடி பிரச்சினைக்கு தீர்வு காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பச்சை உப்பு இல்லாமல் பட்டாசு செய்ய முடியாது. பட்டாசு வெடித்தால் மாசு ஏற்படுவது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. டெல்லியில் மாசு ஏற்படுவதற்கு காரணம் பட்டாசு அல்ல. தற்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பது இல்லை. ஆனால் காற்று மாசு அதிகமாகிவிட்டது. சிவகாசியில் பட்டாசு வெடிக்கிறோம். இங்கு மாசு ஏற்படவில்லை. யாருக்கும் பட்டாசு காரணமாக நோய்பாதிப்பு இல்லை. சுற்றுச்சூழல் விதியின் கீழ் பட்டாசு வராது.

எனவே இது குறித்து முதல்-அமைச்சர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதாடவில்லை என்று கூறுவது தவறு. வினோத் கண்ணா என்ற மூத்த வழக்கறிஞர் இவ்வழக்கில் வாதாடி உள்ளார். இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு நிச்சயம் தீர்வு காணும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேற்று சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story