விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Dec 2018 11:15 PM GMT (Updated: 21 Dec 2018 8:10 PM GMT)

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பட்டாசு தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் பட்டாசு தொழில் முடங்கியதோடு, பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டன. கடந்த 50 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பட்டாசு தொழிலாளர்கள், ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை அதிபர்களும், இந்த தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்தமாதம் (ஜனவரி) 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதுவரை பட்டாசு ஆலைகளை திறக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பட்டாசு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றியும், மாவட்டம் முழுவதும் 28 இடங்களில் கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப் போவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் அறிவித்து இருந்தனர்.

இந்த போராட்டத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை மூலம் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் பட்டாசு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். அதன்படி நேற்று காலை முதலே பட்டாசு ஆலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரள தொடங்கினர்.

நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையோரத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அமைந்து இருப்பதால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. சற்று நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி அனைவரும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, நகர செயலாளர் காதர்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தேவா, பட்டாசுதொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாலட்சுமி உள்ளிட்டோரும், பல்வேறு கட்சி பிரமுகர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சாக்ரடீஸ், சோனி கணேசன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பல்வேறு தொழிற்சங்க பிரமுகர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கலெக்டர் சிவஞானத்திடம் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அனைவரும் ஒருங்கிணைந்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். மேலும் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 3 மணி அளவில் முடிவுக்கு வந்தது. ஆனாலும் பட்டாசு தொழிலாளர்கள் ஒரு பகுதியினர் தொடர்ந்து கோஷமிட்டனர். போலீசார் அவர்களை சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடந்ததால் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் நடந்தது. போராட்டத்தையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே போராட்டத்துக்கு வந்த பட்டாசு தொழிலாளர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக வந்த தகவலால் திடீர் சலசலப்பு உருவானது. இதனால் போலீசாருடன் தொழிலாளர்கள் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கைகள் ஏதும் இல்லை என கூறி சமரசம் செய்ததால் அந்த சலசலப்பு முடிவுக்கு வந்தது.

Next Story