அன்னவாசலில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் சாவு


அன்னவாசலில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் சாவு
x
தினத்தந்தி 22 Dec 2018 5:00 AM IST (Updated: 22 Dec 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசலில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் யாதவர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா(வயது 75). விவசாயி. இவருடைய மனைவி பிச்சாயியம்மாள்(70). இவர்களுக்கு அழகர்சாமி, ரெங்கன், முத்துக்குமார் என 3 மகன்கள் மற்றும் தவமணி என்ற மகள் உள்ளார். இதில் அழகர்சாமி சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக பிச்சாயியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் சிங்கப்பூரில் இருந்து அழகர்சாமி, பிச்சாயியம்மாளை பார்க்க ஊருக்கு வர புறப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிச்சாயியம்மாள் இறந்துவிட்டார். இதனால் மனைவியின் உடலை பார்த்து வெகு நேரமாக கருப்பையா அழுது புலம்பினார். அப்போது சிங்கப்பூரில் இருந்து அழகர்சாமி வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்து அழுத கருப்பையா திடீரென மயங்கி விழுந்தார். அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் அக்குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சாவிலும் இணை பிரியாத தம்பதிக்கு உறவினர்கள், கிராமமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவருடைய உடலும் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டது.

Next Story