கடன் மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு


கடன் மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 11:00 PM GMT (Updated: 21 Dec 2018 10:30 PM GMT)

கடன் மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

கடன் மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடன் மோசடி

மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் வன்ராஜ் ஷா. இவர் இரும்பு பொருட்களை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு தொழிலை விரிவு படுத்துவதற்காக பொதுத்தறை வங்கியில் இருந்து ரூ.1 கோடி கடன் வாங்கினார்.

இந்த நிலையில், வங்கி சார்பில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில், அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், இந்த கடன் மோசடி குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

7 ஆண்டு ஜெயில்

இதையடுத்து தொழில் அதிபர் வன்ராஜ் ஷா, அவரது மனைவி மற்றும் மோசடியில் தொடர்புடைய வக்கீல் பாலாஜி, வங்கி அதிகாரிகள் மனோகர் ஜாதவ், லால்சந்த் வர்மா மற்றும் நர்கீஸ் என்ற பெண் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தொழில் அதிபர் வன்ராஜ் ஷா, வக்கீல் பாலாஜி ஆகியோர் உயிரிழந்தனர். விசாரணை நிறைவில் வங்கி அதிகாரிகள் மனோகர் ஜாதவ், லால்சந்த் வர்மா மற்றும் நர்கீஸ் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய சி.பி.ஐ. கோர்ட்டு, மேற்படி 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. வன்ராஜ் ஷா மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Next Story